நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த வழக்கில், நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய தணிக்கை வாரியம் இதுவரை சான்றிதழ் வழங்காததால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
வாரியம் கோரிய அனைத்து திருத்தங்களையும் செய்த பின்னரும், யாரோ அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரூ. 500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாமதம் ஏற்படுவதாகக் கே.வி.என் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
திரைப்படத்தில் இராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளது.
அத்துடன் தணிக்கைக் குழு உறுப்பினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் திரைப்படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளித்த பிறகு, மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என நீதிபதி பி.டி. ஆஷா கேள்வி எழுப்பினார்.
தை பிறந்தால் வழி பிறக்குமே…திரைப்படத்தை ஜனவரி 10ல் ஏன் வெளியிடக்கூடாது?” என்றும் நீதிபதி வினவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கில் ஜனவரி 9ஆம் திகதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


