எந்தவொரு தரப்பினரும் அரசியல் செய்வதற்காக சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் கருத்துகளையும் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எந்தவொரு மதமும் சட்டவிரோதமான விடயத்துக்கு அனுமதியளிக்க கூடாது.
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் கட்டுமானமொன்று அமைகிறது.
இந்த திட்டம் கோட்டாபய – மஹிந்த காலத்தில் வந்தது. அந்த சட்டவிரோதமான பகுதியில் புத்தர் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அங்கு நேற்றைய தினம் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர், பிரதியமைச்சர் அருண் ஹேசந்திரா உள்ளிட்ட தரப்பினர் தலையிட்டு, காவல்துறையினர் உதவியை நாடிய நிலையில் குறித்த பகுதியில் நிறுவுவதற்கு தயாரான புத்தர் சிலை அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டது.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்திருந்தேன்.
எனினும், மீண்டும் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன், சிலரின் கருத்துக்கு பயந்து, பாதுகாப்புக்காகவே சிலையை அங்கிருந்து அகற்றியதாக இன்று காலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
இது மிகவும் கவலைக்குரியதாகும். விடுதலை புலிகள் காலத்தில் கூட எந்தவொரு பௌத்த சின்னங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மாற்றும் மத சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு எங்களுடைய மக்களும் மோசமானவர்கள் அல்லர்.
எனவே, சிலரின் கருத்துகளை கேட்டு, சட்டவிரோதமான விடயங்களுக்கு துணை செல்லும் கட்சியிலுள்ள அருண் ஹேமசந்திரா தமது பதவியை துறந்து தமிழரசுக் கட்சியில் வந்து இணைய வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி செய்த இந்த விடயம் சரியானது என்றும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதை மனம் திறந்து அவர் கூற வேண்டும்.
எவ்வாறாயினும், நவம்பர் 21 கூட்டத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் இத்தகைய செயற்பாடுகளுக்கு உந்துதல் அளித்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார்.


