இலங்கைக்கு கடத்துவதற்காக இராமநாதபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடலட்டைகளை க்யூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் 250 கிலோ எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சம் இந்திய ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கியூ பிரிவு போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அதன் போது, அப்பகுதியில் இருந்த கட்டடம் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கும்பல் ஒன்று பதப்படுத்தி கொண்டிருந்ததை , கியூ பிரிவு பொலிஸார் அவதானித்து அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட நிலையில் மூவர் தப்பியோடிய நிலையில் ஒருவர் மாத்திரம் மடக்கி பிடிக்கப்பட்டார்.
பிடிபட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , கடலட்டைகளை தேவிப்பட்டினத்தில் வாங்கி , சக்கர கோட்டையில் பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த இருந்ததாக தெரிவித்துள்ளார்.