அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது வெளிநாட்டுத் தலையீடுகள் ‘சிறிய அளவிலேயே’ இருந்ததாகவும், அது வாக்குப் பதிவின் நேர்மைத்தன்மையை பாதிக்கவில்லை என்றும் மத்திய அரசின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அச்சுறுத்தல்கள் பணிக்குழு (SITE Task Force) வெளியிட்டுள்ள “பின்தொடர் நடவடிக்கை (after-action) அறிக்கையில்” இதுகுறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளை இந்தப் பணிக்குழு, உள்ளடக்கியிருந்தது.
குறிப்பாகச் சீனாவுடன் இணைக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய எல்லைக்கு அப்பாற்பட்ட ஒடுக்குமுறைகள் (transnational repression efforts) இப்பணிக்குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது.
கனடாவில் சீன மொழி பேசும் பயனர்கள் அதிகமுள்ள சமூக ஊடக தளங்களில், அரசியல் வேட்பாளர்களைப் பற்றி முரண்பட்ட கதைகளை வலுப்படுத்தும் முயற்சிகள் நிகழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுத் தகவல் கையாளுதல் மற்றும் இணையவழி தலையீட்டு நடவடிக்கைகள் குறித்தும் பணிக்குழுவின் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.