மறுசீரமைக்கப்பட்டுள்ள மின்சார சபையுடன் இணைந்து செயற்பட முடியாத ஊழியர்கள் சேவையில் இருந்து விலகிக்கொள்ள முடியும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்தார்.
மின்சார சபை தனியார் மயமாக்கப்படவில்லை.
மின்சார சபையை வினைத்திறனாக மற்றும் மக்களுக்கு சலுகையை வழங்கவும் மின்சார சபையை இலாபமீட்டும் சபையாக மாற்றுவதற்கே மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
அதற்காக, ஆறு நிறுவனங்களாக மின்சார சபை நிர்வகிக்கப்படவுள்ளது.
இது 100க்கு நூறு வீதம் திறைசேரியிடம் பங்குகளை வைத்துள்ள நிறுவனமாக இருக்கும்.
நான்கு நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இன்னும் இரண்டு நிறுவனங்கள் தற்காலிகமாக ஸ்தாபிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, மின்சார விநியோகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் அரசுக்குச் சொந்தமான இந்த நான்கு நிறுவனங்களிடம் இருக்கும்.
இது குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.
அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதனைப் பேச்சுவார்த்தையினூடாக தீர்வை பெற்றுக் கொண்டிருக்க முடியும்.
இந்த நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்படும் போது, இந்த நிறுவனங்களுடன் எந்தவொரு ஊழியருக்கும் இவற்றுடன் இணைந்து சேவையாற்ற முடியாது என்றால், 9 இலட்சம் முதல் 50 இலட்சம் வரையான இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டு சேவையிலிருந்து விலகிக்கொள்ள முடியும்.
பல்வேறு மாற்றீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மின்சார சபையின் மறுசீரமைப்பை புரிந்துகொண்டு அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்ற முடியும்.
இல்லையேல், இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டு சேவையிலிருந்து விலகிக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
