வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த ஒரு வயது குழந்தையின் தாயொருவரிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியரொருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனையை அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.
வைத்தியசாலைக்கு கருத்தடை சாதனத்தை அகற்றும் நோக்கில் சிகிச்சைக்காக வந்த 25 வயதான தாயை, குறித்த வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அரசு தரப்பில் தரப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு வழங்கத் தவறினால், மேலும் 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படுமெனவும் கூடுதலாக, 1,00,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலும் 1 வருட சிறை விதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
