சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில், நடிகை ரவீனா தாஹா தனது வாக்குரிமை பறிக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தின் தேர்தலில், தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட 23 பதவிகளுக்கு மூன்று அணிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
மேலும் , நடிகை ரவீனா தாஹா, தனக்கு வழங்கப்பட்ட ‘ரெட் கார்டு’ காரணமாக வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். “ரெட் கார்டு இருந்தால் போட்டியிட முடியாது என்று கூறப்பட்டது, ஆனால் வாக்களிக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது எனது வாக்குரிமையும் பறிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
ரவீனா தாஹா, விஜய் டிவியின் ‘பைரவி கச்சேரி ஆரம்பம்’ சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி, முன்பணம் பெற்ற பின்னர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் விலகியதால், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால், அவர் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரவீனாவின் வேட்பு மனு தேர்தலில் நிராகரிக்கப்பட்டதாகவும், இதனால் அவர் போட்டியிடும் வாய்ப்பை இழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
