ஈரானின் அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் ஃபோர்டோ தளத்தில் ஆறு பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகளும், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் தளங்களில் 30 டொமாகாக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு டிரம்ப் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், இஸ்ரேல் மீது அதிகமான டிரோன்களை ஈரான் ஏவியிருந்தது. இந்த மோதலில் அமெரிக்கா நேரடியாகப் களமிறங்கியது இதுவே முதல் முறையாகும். இத்தகைய சூழலில் தனது அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து ஈரான் ஐநா சபையில் கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளது.
இதேவேளை பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவும் போரில் களமிறங்கியுள்ளது மூலம் பிரச்சினை மேலும் தீவிரடையும் அபாயம் உள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். எந்த பிரச்சினைக்கும் ராணுவ நடவடிக்கைகள் நிரந்தர தீர்வு தராது எனவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .