மட்டக்களப்பு ஆரையம்பதியில் தலை தூக்கியுள்ள வாள்வெட்டுக் குழுவை பிரதேசத்தில் இல்லாமல் செய்யுமாறும் காத்தான்குடி பொலிசாரின் பக்கசார்பான செயற்பாடை கண்டித்தும் வாள்வெட்டால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் நீதி கோரி ஆரையம்பதி பிரதேச செயலக்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை (03) பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியலத்திற்கு சென்று மகஜர் ஒன்றை கையளித்தனர்.
கடந்த மாதம் 20 ம் திகதி இரவு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய 4 பேரை கடந்த 24 ம் திகதி கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டதுடன் இதில் தொடர்புடைய இருவரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டுவருதாகவும் இதனால் பிரதேசத்தில் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர் எனவே இந்த வாள்வெட்டுக்குழுவை இல்லாமல் செய்யுமாறு கோரி இன்று காலை 9 மணிக்கு மண்முணை மேற்கு ஆரையம்பதி பிரதேச செயலக்துக்கு முன்னால் பொதுமக்கள் ஒன்று கூடி வாள்வெட்டுக்குழுவை பிரதேசத்தில் இருந்து இல்லாமல் ஒழி, தாக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடு, வன்முறை சூத்திரதாரிகளை சிறையில் அடை, இளைஞர்களை கை கூலியாக்குவபர்களை கண்டுபிடி, போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டகாரர்கள் கையளித்த பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து பேருந்து வண்டியில் மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்குமாகாண பிரதி சிரேஷ்டபொலிஸ் மா அதிபர் காரியலத்துக்கு முன்னால் சென்று அவருக்கான மகஜரை பொலிஸ் அத்தியட்சகரிடம் கைளித்தனர்.
இதன்போது அவர் குறித்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும், ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாகவும் பக்கசார்பாக செயற்பட்ட பொலிசாருக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆர்ப்பாட்டகாரரிடம் அவர் உறுதியளித்ததுடன் அங்கிருந்து ஆர்பாட்டகார்கள் விலகி சென்றனர்.