கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது ஏற்பட்ட பருவ மழையின் பின்னர் சடுதியாக பல பதிகளில் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியவாறு உள்ளதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தென்னை செய்கையில் பெறப்படும் தேங்காயின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதன் காரணமாக தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தென்னை செய்கையாளர்கள் தமது தென்னையில் ஏற்பட்டுள்ள வென் ஈ தாக்கத்திற்கு எதிராக பல தடவைகள் மருந்துகள் தெளித்திருந்த போதிலும் பிரயோசனமற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 20,000 தேங்காய் நாள் ஒன்றுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும், தற்பொழுது 5000 தேங்காயும் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக தேங்காய் வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தேங்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.