ரஷ்யாவுடனான போர் எப்படி முடிவடைய வேண்டும் என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், NATO பொதுச் செயலாளர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு மூத்த தலைவர்கள் ஆகிய மூவரும் உக்ரைனை ஆதரிப்பதில் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், அட்லாண்டிக் கடல்கடந்த வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்தும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை ப்ரஸ்ஸஸ் (Brussels) இல் நடந்த தனது கூட்டங்களுக்குப் பிறகு கனடா திரும்பிய ஜஸ்டின் ரூடோ, ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது அமெரிக்க கொள்கைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கனடாவுக்கு கிடைத்த ஒரு வழியாகும் என்றார். வாங்கும் தேர்வுகளில் இருந்து கனேடியர்கள் அமெரிக்காவிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதன் ஒரு கட்டமாக கனேடிய அரசாங்கம் ஜெர்மனி மற்றும் ப்ரஸ்ஸஸ் (Brussels)நாடுகளுடன் ஹைட்ரஜன், முக்கிமான கனிமங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வலுவான மற்றும் பன்முக உறவைக் கொண்டுள்ளன என்றும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.