நட்ஸ் மற்றும் விதைகளை தினமும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் என மருத்துவர் நிபுணர்கள் முதல் தாய், மனைவி, தந்தை உள்ளிட்ட வீட்டு வைத்தியர்கள் வரை பலரும் கூறுவது. அந்த வகையில், நட்ஸில் பாதாம் பருப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாதாம் சாப்பிடுவதற்கு நல்ல ருசியாகவும் இருக்கும் என்பதால் அனைத்து வயதினரும் அதனை விரும்பி எடுத்துக் கொள்வார்கள். பாதாமில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
அதுவும் ஆசிய நாடுகளின் உணவு முறைகளில் பாதாம் பருப்பு முக்கிய இடத்தையும் பிடிக்கிறது. நமது வீட்டிலும் பாதாமின் பயன்பாடு அதிகமாக இருக்கும். முன்னர் எல்லாம், காலையில் எழுந்தவுடன் குழந்தைகளை பாதாம் சாப்பிட வைக்கும் வழக்கம் பல குடும்பங்களில் இருந்தது. குறிப்பாக இது ஒரு ஆரோக்கியமான செயல்பாடாகவும் பார்க்கப்பட்டது. ஆம் வெறும் வயிற்றில் நீங்கள் பாதாமை உட்கொள்வதன் மூலம் உங்களின் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
தினமும் காலையில் பாதாம்: கிடைக்கும் 5 நன்மைகள் என்னென்ன?
நீங்கள் அதை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம் இரண்டிலும் உங்களுக்கு நன்மையே கிடைக்கும். அந்த வகையில் நீங்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்று பாதாம் பருப்புகளை, அதாவது குறைந்த அளவில் எடுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
தினமும் காலையில் பாதாம்: உடல் எடை குறைக்க கைக்கொடுக்கும்
நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர் என்றால் இந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தினமும் வெறும் வயிற்றில் மூன்று பாதாம்களை சாப்பிடுவதனால் உங்களுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் கிடைக்கும். புரதச்சத்தும் இதில் இருக்கிறது. அப்படி இருக்க உங்களுக்கு காலையில் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால் நீங்கள் நொறுக்கு தீனியை உட்கொள்ள மாட்டீர்கள், அதிகமான கலோரிகளையும் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். இந்த பழக்கம் உடல் எடையை குறைப்பதில் பெரிய அளவுக்கு உதவும்.
தினமும் காலையில் பாதாம்: ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
பாதாமில் மெக்னீசியம் என்ற ஊட்டச்சத்து இருப்பதால் உங்கள் உடலின் குளுக்கோஸ் அளவில் முக்கிய பங்காற்றும். இது உங்களது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். மக்னீசியம் இன்சுலின் சீராக சுரப்பதில் உதவுவதன் மூலம் சர்க்கரை நோய் சார்ந்த ஆபத்துகளையும் நீக்குகிறது.
தினமும் காலையில் பாதாம்: இதயத்தை பாதுகாக்கும்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பாதாமை சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு நல்லது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா…? ஆம், பாதாமில் Monosaturated கொழுப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவும். கொலஸ்ட்ரால் அளவை சீராக்குவதன் மூலம் உங்களின் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் நீங்கள் சீராக வைத்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் பாதாம்: நோய்களிடம் இருந்து பாதுகாக்கும்
நோய் எதிர்ப்பு சக்தி என்பது தற்போது அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறிவிட்டது. காரணம் கரோனா பெருந்தோற்று காலகட்டத்திற்கு பின்னர் தனிநபரின் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சிலர் கருதுகின்றனர். அப்படி இருக்க பாதாமில் உள்ள வைட்டமின் ஈ உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். நீங்கள் காலையில் எழுந்தவுடன் மூன்று பாதாம் பருப்புகளை உட்கொள்வதால் நோய்களில் இருந்தும், தொற்றுகளில் இருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் பாதாம்: எலும்புகள் வலுவாகும்
பாதாமில் மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகிய கனிமங்கள் நிறைந்து இருக்கின்றன. இவை உங்களின் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. மேலும், உடலில் உள்ள கால்சியம் அளவை இது சீராக வைத்து எலும்பின் அடர்த்தியை அதிகமாக்கும். இதனால் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படாது. பெண்களுக்கும் இது மிகவும் உதவும்