வாரியபொல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிப்பதற்குச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது நேற்று சனிக்கிழமை (25) நீராடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
13 வயதுடைய, பண்டார கொஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் சடலம் வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளில் வாரியபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.