நெல்லுக்கான உத்தரவாத விலையும், அரிசியின் கட்டுப்பாடு விலையும் விரைவாக அறிவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மகஜர் ஒன்றின் ஊடாகவே குறித்த கோரிக்கையை முன் வைத்த்துள்ளனர். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்னமும் அறிவிக்கப்பட்டு அது வர்த்தமானியில் வெளியிப்படவில்லை.
குறிப்பாக நெல் கிலோ ஒன்றின் உறுதியான விலையையும், அரிசி கிலோ ஒன்றின் உறுதியான விலையையும் உடனடியாக அறிவித்து அதனை வர்த்தமானியில் வெளியிப்படவேண்டும்.
இதுவரை காலமும் இலங்கையில் ஆண்டுதோறும் 40இலட்சம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அவற்றில் 10ஆயிரம் மெற்றிக்தொன் அளவிலான நெல்லே அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து சுமார் 5000 மெற்றிக்தொன் அரிசியே கொள்வனவு செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.
அரச உணவுக்களஞ்சியங்கள் / நெற்களஞ்சியங்கள் புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும். அதற்கு முன்னர் இம்முறை உலர் அரிசி மற்றும் ஈர அரிசியை நெல்லினை உரிய தரத்திற்கு ஏற்ப கொள்வனவுசெய்து அதற்கு உடனடியாக களஞ்சிய வசதியை பயன்படுத்துவதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபையானது சுமார் 2இலட்சம் மெட்றிக்தொன் அரிசியை சேமித்து வைக்கக்கூடிய சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது.
உணவுத்திணைக்களம், ச.தொ.ச ஆகிய நிறுவனங்களில் நெற்களஞ்சியங்களையும் பயன்படுத்துவதுவதன் மூலம் ஏறத்தாள 3இலட்சம் மெட்றிக்தொன் வரையான நெல்லினை கொள்வனவுசெய்து சேமிக்கமுடியும்.
நெல் அறுவடை காலங்களில் உலரவிடும் தளங்கள் இல்லாமையால் விவசாயிகள் வீதிகளில் நெல்லினை உலரவிடுவதால் வீதிகளின் நெருக்கடி மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றது. இதனை கருத்தில் எடுத்து அதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
தற்போது அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நாவற்குழி உணவுக்கு களஞ்சியம் போன்ற இடங்களில் நெல் அறுவடை காலங்களில் நெல் உலரவிடுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.
ஏனெனில் வயலில் அறுவடை செய்யும்போதே கொள்வனவு செய்வதால் நெல்லில் இருக்கும் ஈரலிப்பைக் காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலையைக் கொடுப்பதற்கும் கொள்வனவாளர்கள் முன்வருவதில்லை என மகஜரில் தெரிவித்துள்ளனர்.