யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் பா. முகுந்தனும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலர் உரையாற்றும் போது,
பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியில் 35 வகையான போட்டிகள் நடைபெற்றமை சிறப்பான விடயம். முதற்தடவையாக நீச்சல் போட்டிக்கான தெரிவும் நடைபெற்றுள்ளது. இப் போட்டிகளில் 200 வரையான வீர வீராங்கனைகள் பரிசில்கள் சான்றிதழ்கள் பெறுவது பாராட்டத்தக்கது.
மேலும், தேசிய ரீதியில் எமது வீர வீராங்கனைகள் சாதித்து வருவதாகவும், அந்த வகையில், உதைப்பந்தாட்டம் ஆண்கள் இம் முறையுடன் தொடர்ந்தும் மூன்றாவது ஆண்டாக தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்றமை அதிசிறப்பான விடயம்.
கூடைப்பந்தாட்டம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தினையும், மெய்வல்லுநர் போட்டிகளில் கோலூன்றிப் பாய்தல் ஆண்கள் போட்டியில் ஏ. புவிதரன் மற்றும் பெண்கள் பிரிவில் என். டக்சிதா ஆகியோர் தேசியப் போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கமும், குண்டெறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் எஸ். மிதுன்ராஜ் இரட்டை வெள்ளிப் பதக்கங்களையும் தேசிய ரீதியாக வென்றுள்ளமையும், பளுதூக்கல் பெண்கள் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி உட்பட இரண்டு பதக்கங்கள், குத்துச்சண்டை ஆண்கள் பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கமும் தேசிய ரீதியில் பெற்றுள்ளனர்.
வசதி வாய்ப்புகள் குறைந்த நிலையிலும் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளுக்கு மத்தியிலும் ஆர்வத்தோடு பங்குபற்றும் சகல வீர வீராங்கனைகளின் எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.