வரியிறுப்பாளர்கள் உள்ளூராட்சிமன்றங்களில் நம்பிக்கை வைக்கும்போதுதான் அவர்கள் தாமாகவே முன்வந்து வரியைச்செலுத்துவார்கள். வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சிமன்றம் ஒன்று முதல் முதலாக சுயமாக ஆதன மதிப்பீட்டை நிறைவேற்றி ஆதனவரி அறவிடும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – கரவெட்டியின், வட்டாரம் -1 கம்பர்மலையில்இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான சேவையை வழங்குவதற்கு வருமானம் முக்கியம். அவ்வாறான வருமானமீட்டலுக்கு இவ்வாறான வரிகள் முக்கியமானவை. 1965ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பிரதேசத்தில் ஆதன மீள்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுவரி அறவீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதில் பங்காற்றிய உத்தியோகத்தர்களையும், வரியிறுப்பாளர்களையும் பாராட்டுகின்றேன். இதை முன்மாதிரியாகக் கொண்டு வடக்கிலுள்ள ஏனைய உள்ளூராட்சிமன்றங்களும் செயற்படவேண்டும், என மேலும் தெரிவித்தார்.
அதேவேளை கரவெட்டி பிரதேச சபையின் வட்டாரம் – 01 இனைச் சேர்ந்த 25 வரியிறுப்பாளர்களின் வரியைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கான பற்றுசீட்டை வழங்கி இந்தச் செயற்பாட்டை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.