வங்கி சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு மூலம் வாழ்க்கை நடத்தும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்வதாக சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐந்து வீதமாக இருந்த withholding tax 10 வீதமாக உயர்த்தப்பட்டமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்.
‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் “பிடித்துவைத்தல் வரியை” ( withholding tax ) 5% இல் இருந்து 10% ஆக அதிகரித்துள்ளமை ரணிலின் அரசை விட மோசமான மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு செயலாகும்.
முன்னரை விட வரிச்சுமையை ஏற்றி, விடிவுக்காய் மாற்றத்துக்காய் காத்திருந்த மக்களுக்கு வாழவிடாமல் செய்கிறதா இந்த அரசு? ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் பிடித்துவைத்தல் வரி 5% இருந்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தேசிய மக்கள் சக்தி, இன்று ஆட்சிக்கு வந்து 10% மாக உயர்த்தியது ஒரு பச்சை நம்பிக்கை துரோகம். ரூ 150, 000 வரை வரி இல்லை எனும் நிலையில் சேமிப்பில் இருந்தும், நிலையான வைப்பில் இருந்தும் வாழ்க்கையை நடத்தும் பல நடுத்தர வர்க்க மக்களின் சோற்றில் மண் அள்ளிப்போடுவது முறையா?’ என சாடியுள்ளார்.