இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன
அதன்படி, யாழ் அரியாலையில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் தன்னை ஏற்றிய ஆனந்தன் என்ற முக்கிய சந்தேக நபர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களை கடல் வழியாக தப்பிச் செல்ல ஏற்பாடு செய்ததாகவும் இஷாரா செவ்வந்தி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தப்பி செல்ல உதவியவர் யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சியில் உள்ள இந்த சந்தேக நபருக்கு சொந்தமான வீட்டில் இருந்து மைக்ரோ வகை துப்பாக்கியையும் கொழும்பு குற்றப்பிரிவினர் மீட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கடல் வழியாகத் தப்பிச் செல்ல இந்த நபர் உதவி செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் யார் என்பதை அவர் மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற படகைக் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கொழும்பு குற்றப்பிரிவின் சிறப்புக் பொலிஸ் குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தனர்.
ஆனந்தன் என்ற சந்தேக நபரின் கையடக்க தொலைபேசி தற்போது கொழும்பு குற்றப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள கேரள கஞ்சா கடத்தல்காரர்கள் தொடர்பான பல தகவல்களையும் கொழும்பு குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பாக முறையான விசாரணை நடத்துவதற்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி ஆனந்தனை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை நடத்துவதிலும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களைத் தவிர, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கியதற்காக நான்கு சந்தேக நபர்கள் முன்னர் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
