மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை ஈடுபிடிக்கும் கம்பனி ஒன்றின் முகாமையாளர் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபா பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை ஈடு பிடிக்கும் நிறுவனம் ஒன்றில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (24) ஆம் திகதி அதன் முகாமையாளர் கணக்காளரை அனுகி இன்று ஈடு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் கணவனுடன் தகராறு எனவே அந்த தங்க ஆபரணங்களை பார்ப்பதற்கு வருவார் என கூறி அதனை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுத்து தனது மேசையில் வைத்து கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து கம்பனியின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இருந்து வங்கிக்கு பணம் இதுவரை வைப்பில் இடப்படவில்லை அதனை வைப்பில் இடுமாறு கோரியபோது அந்த 17 இலட்சம் ரூபா பணத்தை தான் வைப்பில் இடுவதாக கணக்காளரிடம் இருந்து பணத்தை முகாமையாளர் எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் முகாமையாளர் தங்க ஆபரணங்களை வாடிக்கையாளரிடம் காட்டி விட்டு இந்த வாறன் என தங்க ஆபரணங்களையும் பணத்தையும் எடுத்து கொண்டு பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு கம்பனியில் இருந்து வெளியேறி போயுள்ளவர் மாலை ஆகியும் அவர் கம்பனிக்கு திரும்பி வராததையடுத்து அவருடைய கையடக்க தொலைபேசிக்கு தொடர்பு ஏற்படுத்திய போதும் அது நிறுத்தப்பட்டிருந்தது தங்க ஆபரணம் மற்றும் பணத்துடன் போனவர் போனவர் தான் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த திருட்டு தொடர்பாக கம்பனியின் கணக்காளர் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற குறித்த முகாமையாளர் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
