‘‘வெலிக்கடை சிறையில் வைத்து 1983ஆம் ஆண்டு இதே மாதம் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழி எங்கேயுள்ளது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்’’ என எம்.பி செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்தச்சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் தெரிவிக்கையில்
‘‘ஜூலை மாதம் வெலிக்கடைச் சிறையில் எம்மவர்கள் படுகொலை செய்யப்பட்ட மாதம். தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைகளுக்காக முதலில் ஆயுதமெடுத்துப் போராடிய தலைவர் தங்கதுரை, குட்டிமணி போன்றோர் பருத்தித்துறை மணற்காட்டு கடற்கரையில் 1981 சித்திரை மாதம் 05ஆம் திகதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள்.
1983 ஜூலை மாதம் 25, 27ஆம் திகதிகளில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தமாக 53 பேர் சிங்களக் காடையர்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இந்தப் படுகொலைக்கு எல்லோரும் உடந்தையாக இருந்தார்கள். குட்டிமணி உட்பட பலரின் கண்கள் பிடுங்கப்பட்டன 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
எனவே, 1983ஆம் ஆண்டு இதே மாதம் வெலிக்கடைச் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழி எங்கேயுள்ளதெனவும் அரசு கண்டுபிடிக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலை அரசு விசாரிப்பதுபோன்று இந்த வெலிக்கடை படுகொலைகளையும் விசாரணை செய்ய வேண்டும்’’ என்றார்.
