தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் பல்வேறு புதிய திட்டங்களுடன் இன்று (12.04) வெளியிட்டு வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை என 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி முதல் முறையாக போட்டியிடுகின்றது.
அதில், வவுனியா மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை பல முன்னேற்றகரமான அபிவிருத்தி திட்ட நோக்கங்களை கொண்டதாக, முதலாவது தேர்தல் விஞ்ஞாபனமாக வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதில், இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் மாநகரசபை கழிவு அகற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு காலையில் ஏற்படும் அசௌகரியங்களை நிறுத்தல், விசேட ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்து திட்டம், வவுனியா குடியிருப்புகளும், வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் விசேட உடற் பயிற்சிக்கான திட்டம், மாநகரசபை பகுதியில் வாழும் மக்களுக்கு பாதிக்காத வகையில் சோலைவரி அறவிடுதல், நூலகத்தை மேலும் மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நலத்திட்டங்கள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபையின பண்டாரிக்குளம் வட்டார அலுவலத்தை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோர் இணைந்து திறத்து வைத்த பின்னரே அதனை இணைந்து வெளியிட்டனர். இதில் கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.