நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரத்தையும், அதில் இருந்த மதுபானங்களையும் இன்றையதினம் வியாழக்கிழமை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறிகாட்டுவானில் இதற்கான அனுமதி பெற்ற படகில் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து உரிய விருந்தகத்திற்கு அனுமதி மற்றும் இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரத்தில் மதுபானம் ஏற்றப்பட்டவேளையில் பொலிஸாரால் வாகனத்துடன் மதுபானத்தையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டுசென்றுள்ளனர்.
துறைமுகப் பகுதியில் மதுபானம் இறக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக நெடுந்தீவில் நின்ற யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இதனை நேரடியாக அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்த நிலையில் , அண்மையில் இது தொடர்பாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் நெடுந்தீவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும் அதற்கான முடிவு இன்னும் வழங்கப்படாத நிலையில் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.