காலை டிபன் செய்ய இட்லி, தோசை மாவு இல்லையா? அப்போது பூரி, பொங்கல் என்று செய்வதற்கு பதிலாக, ஒருமுறை வீட்டில் ரவையும், தயிரும் இருந்தால், பன் தோசையை ட்ரை செய்யுங்கள். இந்த தோசை செய்வதற்கு மிகவும் சுலபம். இது பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.
இந்த தோசைக்கு தேங்காய் சட்னி ஒன்றே போதும். செம சூப்பராக இருக்கும். முக்கியமாக இப்படி தோசை செய்யும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள் காலையில் தாமதமாக எழுந்துவிட்டால், டக்கென்று ஒரு காலை டிபன் செய்ய நினைத்தால், இதை செய்யலாம். உங்களுக்கு பன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* ரவை -1 கப்
* தயிர் – 1/2 கப்
* உப்பு – 1 டீஸ்பூன்
* அரிசி மாவு – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 2
* கறிவேப்பிலை – சிறிது
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை: * முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ரவை, 1/2 கப் தயிர், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி, ரவையுடன் சேர்த்து அத்துடன் கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து விட வேண்டும்.
* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், ஒவ்வொரு கரண்டியாக கல்லில் ஊற்றி, மேலே எண்ணெய் சேர்த்து, மூடி வைத்து சிறிது நேரம் வேக வைத்து, பின் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான பஞ்சு போன்ற பன் தோசை தயார்.