+1 514-800-2610

"தமிழ் இன அழிப்பின் அடையாளமே'' : யாழ் நூலக எரிப்பு..!!

2020-06-01 02:15
தாயக வலம்

 

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை)39 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது.

யாழ் நூலகம்
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின் அடையாம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.

இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழமைவாய்ந்த தமிழ், ஆங்கில நூல்களும் மற்றும் ஓலைச்சுவடிகளும் அழிந்து போயின.
அழிந்த புத்தகங்கள் எவை?
இவற்றில் கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம் ஆண்டில் பிலிப்பஸ் பால்டியார் என்பவர் எழுதிய டச்சு ஆட்சியில் இலங்கை என்னும் நூல், 1660 ஆம் ஆண்டில் கண்டி மன்னரால் சிறைபிடிக்கப்பட்டவேளை றொபேட் நொக்ஸ் என்பவர் எழுதிய இலங்கையராவார் என்னும் நூல் ஆகியவை அழிந்தன.

1585 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட நூல், சேர் பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய பகவத்கீதை விளக்கம், சித்தாந்தம், செந்தமிழ் இலக்கிய நூல்கள், திருமதி இராமநாதன் அம்மையார் எழுதிய இராமாயாண மொழிபெயர்ப்பு, மகாகவி பாரதியாரின் நண்பரான நெல்லையப்பன் எழுதிய நூல்கள், கடலைக்குடி நடேச சாஸ்திரியார் எழுதிய சோதிட சாஸ்திர நூல்கள், வானசாஸ்த்திரம் சம்பந்தமான நூல்கள், சித்தவைத்திய வாசகங்கள் அடங்கலான ஏட்டுச்சுவடிகள் ஆகியவை அழிந்தன.

மேலும், முத்துத்தம்பிபிள்ளை ஏழுதிய அபிதானகோசம், சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி, முதலியார் இராசநாயகம் எழுதிய புராதன யாழ்ப்பாணம், சுவாமி ஞானப்பிரகாசம், முத்துத்தம்பிபிள்ளை எழுதிய யாழ்ப்பாணம் பற்றிய நூல்கள், கல்லடி வேலன் என்று அழைக்கப்பெற்ற கே.வேலுப்பிள்ளை இயற்றிய யாழ்ப்பாண வைபவகௌமுகி, சிற்பக்கலை பற்றிய நூல்கள், தனிநாயக அடிகளார் பதிப்பித்து வெளியிடப்பட்ட"தமிழ் கலாசாரம்" எனும் ஆங்கில சஞ்சிகை, இராசையனார், வன்னியசிங்கம், கதிரவேற்பிள்ளை, ஆனந்தகுமாரசாமி மற்றும் முதலியார் குலசபாநாதன் சேகரித்த நூல்கள், மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்து பிரதிகளும் அழிவடைந்தன.
யாழ் நூலகம்
இந்நூலகத்தை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவின் தமிழ்நாடு உட்பட பல பாகங்களிலிருந்தும் தேடிச் சென்று பயன்படுத்தியிருந்தனர்.
யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்

யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டு 39 ஆண்டுகள் கடந்தாலும்கூட அந்த அழிப்பு நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் இதயங்களில் ஏற்படுத்திய வடு இன்னமும் மாறாதது.
தென்னாசியாவின் மிகப் பெரிய அறிவியல் பொக்கிஷமாக போற்றப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தின் அழிப்பு என்பது மனித நாகரிகத்தின் மோசமான துயரம். 1981ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவில் இந்த கொடுமை நேர்ந்த போது அதனை சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாடியில் இருந்து நேரில் பார்த்த தாவீது அடிகளார் அந்த கணத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி ஒன்றே அந்த நூலகத்தின் பெறுமதியை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ்நூலகத்தை எரித்தனர்.

இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை பாரம்பரிய சொத்திழப்பை , தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள்.  ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு அது. தெற்காசியாவில் மிகப் பெரும் நூலாகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97 ஆயிரம் அரியவகையான  புத்தகங்கள் காணப்பட்டன.

பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நுல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டன. மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்ட நிலையிலேயே அது வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டது.

யாழ் நூலக எரிப்பு என்பது இருபாதம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் இன நூலெரிப்பு வன்முறையாகும். எவ்வாறு 1983 இல் திட்டமிட்டு இனக்கலவரம் செய்யப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்களோ அதைப்போலவே மிகவும் திட்டமிட்டு இன அறிவழிப்பு செய்யப்பட்டது. தனி ஈழத்திற்கான அரசியல் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தனி ஈழத்திற்கான ஆயுதப் போரட்டத்திற்கும் உரமூட்டியது.

யாழ்.நூலக அறிவழிப்பு  வன்முறை  ஈழத் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை தோற்றுவித்து. ஒரு  அறிவற்ற பிற்போக்குத் தனமான கொடிய  இந்தச் செயல் இந்த நூலெரிப்பு வன்முறை ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமின்றி உலக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இன மேலாதிக்கத்தின் அசிங்கமான வெளிப்படாகவும்  கொடிய இன வெறி அறிவுக்கு எதிரான வெளி மனோபாவத்தின் நடவடிக்கையாகவும் இந்த நிகழ்வு மதிப்பிடப்படுகிறது. இனத்தின் சரித்திரத்தை அழிக்க புத்தகங்களுடன் வன்முறை புரிந்த செயல் இது. அறிவுடன், சிந்தனையுடன் வன்முறை புரிந்த செயல் இது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்கா உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. அன்றைய அரசின் இனவெறிக் குண்டர்கள். இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள், கூட்டாக இந்த நூல் எரிப்பு வன்முறையில் ஈடுப்பட்டார்கள்.

யாழ் நூலக எரிப்பு மிகவும் கண்டிக்கத்தக்க , அறிவுடைய, சிந்தனையுயைட மனித சமூகம் வெட்கப்படக்கூடிய ஒரு செயலாக இருக்கின்றது. ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக ஈழத்தில், அதன் பூர்வீகக் குடிகளான ஈழத் தமிழர்களின் சரித்திர தடங்கள் மிக திட்டமிட்டு - தெளிவான கொள்கையில் அழிக்கப்பட்டு வருகின்றன. அன்றைக்கு புத்தகங்களுடன் ஒரு நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் போர் நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு நூலகங்கள் அழக்கப்பட்டுள்ளன. இலங்கையை ஆண்ட  அத்தனை அரசுகளும் அழித்துள்ளன. 

போரின் போது பாடசாலை நூலங்களின் புத்தகங்கள், தனிப்பட்ட வாசகர், எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரதேச நூலகங்களின் புத்தகங்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்தவுடன் கைப்பற்றபட்ட பகுதிகளில் இந்த அறிவழிப்பு நடைபெற்றது. இன நூலெரிப்பு வன்முறை என்பது 1981 இல் ஆரம்பிக்கபட்டு மிகவும் விரிவுபடுத்தப்பட்ட அத்துடன் சரித்திரத்தை , பண்பாட்டை, அழிக்கும் தொன்மங்களை அழிக்கும் செயற்பாட்டின் மற்றொரு செயல்தான் ஆலயங்கள், சிலைகள், சமாதிகள், தொல்லியல் மையங்கள், பண்பாட்டு புலங்கள் முதலியவற்றை அழித்தலும் ஆகும். இதுவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

நன்றி : வீடியோ ஆதவன் டீ.வி

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி