மொன்றியல் டாலர்ட்-டெஸ்-ஆர்மேக்ஸ் (D.D.O ) நகரசபையில் ஜனவரி மாதத்தினை தமிழ் மரபு மாதமாக உத்தியோக அங்கீகாரம்..!!
தமிழ் மரபுத் திங்கள் என்பது நம் அடையாளங்களைப் பேணவும் காலகாலமாகத் தொடரும் தமிழரின் பழைமை, செழுமை, நாகரீகம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, தமிழர் கலை, தமிழர் பண்பாடு, தமிழர் உணவு, தமிழர் இலக்கியம், மாண்பு என்பனவற்றை வருங்காலத் தலைமுறைகளுக்கு ஊட்டி வளர்ப்பதற்கும், பல்லினப் பண்பாட்டுச் சூழலில் நாம் எமது மரபுகளைப் பேணி வாழ்வதற்கும், நாம் ஒரு நீண்ட நெடிய நாகரிகமுடைய தமிழ்த்தேசிய இனம் என்பதை நிலை நிறுத்துவதற்கும், தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்க வேண்டுவதற்கும் தமிழர் மரபுத் திங்கள் எனும் பிரகடனம் அவசியமாகின்றது.
அந்த வகையில் கியூபெக் மாகாணத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் மொன்றியலில் டாலர்ட்-டெஸ்-ஆர்மேக்ஸ் (Dollard-des-Ormeaux ) நகரசபை ஜனவரி மாதத்தினை தமிழ் மரபு மாதமாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தமிழ் மரபுத் திங்களுக்கான தீர்மானத்தை நகரசபை உறுப்பினர்களான வலேரி அசோலின் மற்றும் ரியான் பிரவுன்ஸ்டீன் ஆகியோர் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தை சபை ஏகமானதாக அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் நகரங்கள் ரொறன்ரோ, மார்க்கம், ஏசக்சு, பிரம்ரன், ஒசாவா, விற்பி, யோர்க் ஆகியவற்றின் மாநகர அவைகள் முதலில் தமிழ் மரபுரிமைத் திங்களை அங்கீகரித்தன.
அதனை தொடர்ந்து கனடிய பாராளுமன்றத்திலும் இதற்கான அங்கீகாரம் கிடைத்தது குறிப்பித்தக்கது.இன்று தமிழர்கள் வாழுகின்ற நாடுகள் தோறும் தமிழ் மரபுத் திங்களுக்கான அங்கீகாரம் கிடைத்து வருகின்றது.