இன்று கியூபெக் மாகாணத்தில் பனிப்புயல் காரணமாக எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து மலை போல் காட்சி அளிக்கிறது. வீடுகள், சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. கார்கள் உள்ளிட்டவை பனிக் கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. அவற்றை அகற்றும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 200 மேற்பட்ட வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக 20 மற்றும் 30 நெடுஞ் சாலைகளில் இரண்டு பாரிய விபத்துகள் இடம் பெற்றதாகவும் இதில் 50க்கு மேற்பட்ட வாகங்கள் விபத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
15 முதல் 25 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு மொன்றியல்,லவால், (Laval), ஆகிய பகுதிகளில் பதிவாகியதாக சுற்றுச்சூழல் கனடா சிறப்பு வானிலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் திங்கள்கிழமை பனிப்பொழிவு 15 முதல் 25 செ.மீ. அளவிலான இருக்கும் என்றும் காற்று மணித்தியாலத்திற்கு 70 km வேகத்தில் வீசும் எனவும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மயூரன் முருகையா
இதையடுத்து, குறித்த சில பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டது. நெடும்சாலைகளில் பனிபொழிவு அகற்றும் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற போதும் பொது மக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
மொன்றியல் மாநகர சபை பணியகற்றும் நடவடிக்கைகள் செவ்வாய்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளை கனடா போஸ்ட் பனிப்புயல் காரணமாக திங்களன்று கியூபெக்கில் அஞ்சல் விநியோகத்தை நிறுத்தியது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கனடா போஸ்ட் "நிலைமைகள் மேம்பட்டவுடன் அஞ்சல் விநியோகம் மீண்டும் தொடங்கும், அவ்வாறு செய்வது பாதுகாப்பானது. எங்களின் ஊழியர்களின் பாதுகாப்பே எங்களின் முதலிடத்தில் உள்ளது” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.