உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது.பொங்கல் பண்டிகையையொட்டி கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் வாழ்த்து செய்தியில்...
“கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினர் இந்த வாரம், அறுவடைத் திருநாளான தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.
“மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டங்களுக்கும், சமூகத்திற்கும் முக்கியத்துவம் வழங்கும் பண்டிகையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. பாரம்பரியமாக குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றுசேர்ந்து அமோகமான விளைச்சலுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இனிப்பான பொங்கலையும் பகிர்ந்துகொள்வார்கள்.
கோவிட்-19 உலகத் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை நாம் தற்போதும் தொடர்வதால் இவ்வாண்டிலும் கொண்டாட்டங்கள் வேறுபடுமென்றாலும், தைப்பொங்கலின் அடிப்படையான சமாதானம், ஒற்றுமை, பரிவு ஆகியவற்றைத் தமிழ்க் கனேடியர்கள் கொண்டாட்டங்களில் உள்ளடக்குவார்களென்பதை நான் அறிவேன்.
“கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் மரபுரிமைத் திங்களாகவும் விளங்குகிறது. தமிழ்ச் சமூகத்தின் செழிப்பான வரலாறு, மீண்டெழும் வல்லமை மற்றும் பலம் என்பன குறித்து அனைத்துக் கனேடியர்களும் சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது. தமிழ்க் கனேடியர்கள் இந்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் துறைகளில் வழங்கியதும், தொடர்ந்து வழங்குவதுமான பெருமளவான பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடும் காலமாகவும் இது அமைகிறது.
நாம் ஒன்றுபடும்போது, மேம்பட்டதும், அதிக நியாயம் நிலவுவதும், அனைவரையும் அதிகளவு உள்ளடக்கியதுமாகக் கனடாவை மாற்றலாம். “கனடாவிலும், உலகெங்கிலும், தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்கும் இந்தப் பண்டிகை மகிழ்ச்சியானதாக அமைவதற்கு எனது குடும்பம் சார்பாக சோஃபியும் நானும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.