நுவரெலியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகனம் நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடன்பிறந்த சகோதரர் வீட்டில் இன்று (13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக அரச திணைக்களங்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் ஏதேனும் ஓர் இடத்தில் சட்ட விரோதமாக மறைத்து வைக்கப்பட்டு, பாழடைந்த நிலையில் விடப்பட்டால் அது தொடர்பில் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கிணங்க, நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.