பிறந்தான் ....பிறந்தான் ஒரு சமரசம் இல்லாத தலைவன் பிறந்தான் - மேதகு திரைப்படம் ஒரு பார்வை..!!
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன், எப்படி ஆயுதப்போராளியாக உருவெடுத்தார் என்பதைச் சொல்லும் வரலாற்றுப்படம் ‘மேதகு’, BS Value தளத்தில் வெளியாகியிருக்கிறது.
பண்டாரநாயக்க காலத்திலிருந்து சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான பாரபட்சம் நிலவிவந்தது. தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ‘ஈழத்தந்தை’ என்றழைக்கப்படும் செல்வநாயகத்தின் அமைதிவழிப் போராட்டங்களை இலங்கை அரசும் அதை இயக்கும் பௌத்த பிக்குகளும் கண்டுகொள்ளவில்லை. பொறுமையிழந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுக்க, அதில் பிரபாகரன் எப்படிப் போராளியாக உருவானார் என்பதைச் சொல்கிறது படம்.
தெளிவான அரசியல் சார்புடன் உருவாகியிருக்கும் படம் என்றாலும் வெறுமனே பிரசாரமாக மட்டுமே இல்லாமல் கலைநேர்த்தி, அழகியல், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டமை ஆகியவற்றைச் சிறப்பாக மேற்கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் கிட்டுவுக்கு வாழ்த்துகள். தெருக்கூத்து வடிவத்தில் முழுக்கதையையும் சொல்லியிருக்கும் உத்தி, சிறப்பு!
இளவயது பிரபாகரனின் உருவத்தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன் மிகவும் இயல்பான நடிப்பையும் வழங்கியிருக்கிறார் குட்டிமணி. ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்த ஆதங்கம், யாழ்ப்பாணம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு வன்முறை குறித்த கோபம், அரசியல் உரையாடல்கள் என அனைத்தையும் நேர்த்தியாகப் பிரதிபலித்திருக்கிறார். தெருக்கூத்துக் கலைஞர்களாக ராஜவேல் - பெருமாள், பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளையாக ராஜா, மேயர் துரையப்பாவாக அரங்கநாதன் ஆகியோர் கவர்கிறார்கள்.
தமிழர்கள்மீதான வன்முறை யதார்த்துடன் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. ஆல்பிரட் துரையப்பா கொலைத்திட்டம் ஒரு மர்மப்படத்துக்குரிய விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘உரிமையைக் கேட்டால் அதற்கு விலை உயிரா’, ‘சுவாசிக்கக் கத்துக்கிட்டு இருக்கும்போது, ஏன் நுரையீரல்ல கத்தி பாய்ச்சுறாங்க’ எனக் கத்திமுனை வசனங்கள். உறுத்திக்கொண்டு தெரியாமல், நிகழ்வுகளின் கைபிடித்துக்கொண்டு பயணிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரியாஸ். மாயத்தை நிகழ்த்துகிற திரைக்கதையில், இறுதிவரை தன் பிடிமானத்தை விடாது தொடர்கிறது பிரவீன் குமாரின் இசை.
கண்முன் வாழ்ந்த ஒரு மாவீரனின் வாழ்க்கையைப் படைப்பாகச் சித்திரித்த வகையில் வெற்றி பெற்றிருக்கிறார் ‘மேதகு.’
நன்றி : விகடன் விமர்சனக்குழு