நேட்டோ (NATO) அமைப்பில் பயிற்சிப் பணியாளராக (intern) பணியாற்றி, உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கனடியப் பிரஜை ஒருவருக்குப் பாதுகாப்பு அனுமதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்ததை, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புப் பரிசோதனை அமைப்பில் குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிறப்புக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இன்றைய தினம் சாட்சியமளிக்கும்போதே, அமைச்சர் கரி ஆனந்தசங்கரி இந்த விவரங்களை வெளியிட்டார்.
பெல்ஜியத்தில் வைத்து உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்குக் கனடிய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சு மூலமாகவே பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட நபருக்கு 2023 ஆம் ஆண்டில் நிதி மோசடி தொடர்பில் நீதிமன்றத் தண்டனை வழங்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு எவ்வாறு
பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரிடம் தீவிரமான கேள்விகளை
எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், துறைசார் பிரதித் தலைவர்களே பாதுகாப்பு அனுமதிகளை வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளதாகவும், கனடிய பாதுகாப்பு உளவுச் சேவை (CSIS) மற்றும் அரச உயர் பொலிஸ் படை (RCMP) ஆகியவை வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்புப் பரிசோதனை முறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக இந்த இரு பாதுகாப்பு முகமைகளும் தமது
அலுவலகத்திற்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அவற்றை தாம் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தற்போதும் பாதுகாப்பு அனுமதியைக் கொண்டுள்ளாரா என்பது குறித்துத் தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஆனந்தசங்கரி, அது தொடர்பான விவரங்களை வெளியுறவு அமைச்சிடமே கேட்டுப் பெற வேண்டும் என்றும் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

