கனடாவிலிருந்து அல்பேர்ட்டா பிரிந்து தனி நாடாகச் செல்லும் முயற்சிக்கு மக்கள் பெரும்பான்மையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அல்பேர்ட்டா மாகாணத்தில் நேற்று 19ஆம் திகதி நடைபெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பின் ஆரம்ப முடிவுகளின்படி, சுமார் 76 சதவீத வாக்காளர்கள் அல்பேர்ட்டா தொடர்ந்து கனடாவின் ஒரு மாகாணமாக இருக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளை, சுமார் 24 சதவீதத்தினர் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான கட்டுப்படுத்தும் வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவு, கனடாவின் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி வரும் பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் சாதகமாக அமைந்துள்ளது. அல்பேர்ட்டா மக்கள் ஒற்றுமையைத் தெரிவுசெய்துள்ளதாகவும், நாட்டை மேலும் வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அல்பேர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தலைமையிலான அரசாங்கம் இந்த வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. குடியேற்றக் கொள்கை, சமூக நலத்திட்டங்கள் மற்றும் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மேலும் ஒன்பது கேள்விகளும் வாக்கெடுப்பில் இடம்பெற்றிருந்தன.
எனினும், கனடாவிலிருந்து பிரிவது தொடர்பான கேள்வியில் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை, நாட்டின் ஒற்றுமையை ஆதரிக்கும் தரப்பினருக்கு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முடிவுகள் தற்போது ஆரம்பகட்ட அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளாகும். இறுதி உத்தியோகபூர்வ முடிவுகள் ஒக்டோபர் 29ஆம் திகதி வெளியிடப்படும் என அல்பேர்ட்டா தேர்தல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனடாவின் ஒற்றுமை குறித்த முக்கிய அரசியல் விவாதத்திற்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த முடிவு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

