+1 514-800-2610

நேற்றைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவும், நாளைய சமூகத்திற்குச் அதனைச் சொல்லவும் அருங்காட்சியகங்கள் உதவுகின்றன-கணபதி சர்வானந்தா

2020-02-18 14:08
தாயக வலம்

கணபதி சர்வானந்தா

நேற்றைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவும், நாளைய சமூகத்திற்குச் அதனைச் சொல்லவும் அருங்காட்சியகங்கள்  உதவுகின்றன. ஒரு நாட்டை அல்லது இனத்தின் வரலாற்றை  அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சார்ந்து  அமைக்கப் பட்டிருக்கும் அருங்காட்சியகத்துக்குள் போனாலே போதும் , அவர்கள் பற்றிய பலதை வாசித்தறிந்து கொள்ளலாம் என்கிறார் ஒரு வரலாற்றுப் பேராசிரியர்.  ஒரு நாட்டின் அதுவும் குறிப்பாக ஒரு இனத்தின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகங்களின் பணி மிகவும் முக்கியமானது. அதன் முக்கியத்துவத்தை  அறிந்தவர்களும், அதனை உணர்ந்தவர்களும் அது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற கரிசனையினால் 1977 ஆண்டு தொடக்கம் மே 18 ஐ சர்வதேச அருங்காட்சித் தினமாக அறிவித்து உலகம் முழுவதும் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

முன்பு, யாழ். பிரதான வீதியில் எம்மை அடையாளப்படுத்தியதாக ஒரு சிறு அருங்காட்சியகம் காணப்பட்டது. அதுவும் போர்க்காலச் சூழலால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து காணாமல் போய்விட்டது. இதுவரை எமது சில அடையாளங்களாக நாவலர் மண்டபத்துக்குப் பின்னால் உள்ள அருங்காட்சியகம் சில பொருட்களைத்  தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடங்கிய போது அங்கு காணப்பட்ட பல பொருட்கள் இன்று இல்லையாம்.

காணாமலாக்கப்பட்டுவிட்டதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். அதேசமயம் எமது மரபை சொல்லக் கூடியதும், வரலாற்றை எடுத்துரைக்கக் கூடியதுமான  பல பொருட்கள் முன்பு  தனியார் வசம் இருந்தன. அவர்கள் தமது முதுசங்கள் எனப் போற்றிப் பாதுகாத்தும் வந்திருக்கின்றனர். அதுவும் யுத்த காலங்களிலும், யுத்தம் மௌனிக்கப்பட்ட காலங்களிலும் காணாமல் போய்விட்டன. பலவற்றை தென்னிலங்கை வியாபாரிகள் பணம் கொடுத்து வாங்கிச் சென்று விட்டனர். அதன் சந்தைப் பெறுமதியை அவர்கள் அறிந்து இருந்தனர். அதனால் அவர்கள் அதனை விலைகொடுத்து வாங்கிச் சென்று எமது சூழல் அல்லாத இடங்களில் அவற்றை அழகுப் பொருள்களாகக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். அதேவேளை இது போன்ற புராதனப் பொருட்களை வாங்கி, விற்கும் வியாபார நிறுவனங்களுக்கும் அவற்றை விற்றுப் பெரும் பொருளைச் சம்பாதித்துவிட்டனர். எம்மவர்களுக்கு அதன் வரலாற்றுப் பெறுமதி தெரியாமல் இருந்ததே அதற்கான காரணம் எனலாம். அதனால் பலவற்றைக் கைநழுவ விட்டுவிட்டோம். இன்று அத் தவறை உணர்கின்றோம்.

ஆனால் எமது மரபுச் சின்னங்களைப் பாது காக்க வேண்டும் , அவற்றை ஓரிடமாக்கிப் பேணிப்பாதுகாத்துக் காட்சிப் படுத்த வேண்டும் என்ற உரையாடல்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், யார் அந்தச் சமூகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது? என்ற கேள்வி நெடுநாளாக எம்மத்தியில் இருந்து வந்திருக்கிறது. அத்துடன்  “அவ்வாறான பொருட்கள் எம்மிடம் உண்டு. ஆனால் யாரிடம் அவற்றைப் பொறுப்பாக ஒப்படைப்பது? ” என்ற கேள்வியும் கூடவே காணப்பட்டது.

இவ்வாறான கேள்விகளுக்கு விடை சொல்வதைப்போல சிவபூமி அறக்கட்டையினர் ஒரு பாரிய முன்னெடுப்பைச் செய்திருக்கின்றனர். தற்போது யாழ். மண்ணின் மரபுரிமைகள் சார்ந்த பொருட்களைப் பாதுகாக்கவும், வரலாற்றைச் சொல்லக் கூடியதுமான ஒரு அருங்காட்சியகத்தை  யாழ்ப்பாண  இராசதானியின் நுழைவாயில் என்று சொல்லப்படும் நாவற்குழி மண்ணில் கடந்த சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துப் பொதுமக்கள் பார்வைக்காக அது விடப்பட்டிருக்கிறது.

சிவபூமி அறக்கட்டைளையின் ஒரு நீண்டகாலக் கனவென்றுதான் இதனைச் சொல்லலாம் .ஏனெனில் இதற்கான பொருட்களின் சேமிப்பும், ஒன்றிணைப்பும் பல ஆண்டுகளுக்கு முன்னரே  தொடங்கிவிட்டதைப் பலர் அறிவர். நாவற்குழி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல பொருட்கள் அதுவரை சிவபூமி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிறுவன வளாகங்களுக்குள் – வெவ்வேறு இடங்களில்  சேமித்து வைக்கப்பட்டவை. இன்றைய தேவை கருதிப் பல ஆண்டு களுக்கு முன்னரே அவைகளைச் சிறுகச் சிறுகச் சேமித்து வந்திருக்கிறார்  சிவபூமி அறக்கட்டளையின் நிறுவுனர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள்.

“இது எனது நீண்டகாலக் கனவு. இதில் காட்சிப்படுத்தப்பட்ட பல பொருட்களை நான் ஐந்து சந்தி சூழலிலே காணப்படும் பழைய இரும்பு வியாபாரிகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.அதற்காகப் பல மணி நேரங்களைச் செலவிட்டு அவர்கள் சேமிப்பு இடங்களுக்குள் போய் பார்த்துப் பார்த்துச்  ஒவ்வொன்றாகத் தேர்வு செய்து களைத்துப்போன சமயமும் உண்டு.” என்று தனது அனுபவத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டார் அவர்.

தொடக்க விழாவின்போது வந்தவர்களில் பலர் காட்சியக அமைப்பைப் பார்த்துவிட்டு  வாயில் விரலை வைத்தபடி பிரமித்துப் போனார்கள்.ஏனெனில் சம காலச் சூழலில் இப்படி ஒன்றினைச் சமைப்பதற்கு முதலில் ஆன்ம பலம் வேண்டும். அத்துடன் தன்னம்பிக்கையும் கூடவே வேண்டும். அத்துடன்  அது சார்ந்த அரசியலையும் அறிந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல அதனூடகச் சொல்லப்படப்போகும் செய்திகளுக்கு எதிர்வினை யாற்றவென்றும்  எம்மத்தியில் ஆட்கள் உண்டு. ஆனால் எமது சரித்திரமும், வரலாறும், வரலாற்று உரிமைகளும்,மரபுரிமை சார் விடயங்களும் கொச்சைப்படுத்தப் பட்டு அவை எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்ட  இத் தருணத்தில் இது போன்ற நடவடிக்கைகள்தானே அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்க உதவுகின்றன. மீண்டெழ உறுதுணையாகின்றன. இவை போன்ற செயற்பாடுகளும் எம் மத்தியில்  இல்லாது போனால் எதனூடாக  நாம் எம்மை அடையாளப்படுத்தப் போகிறோம்?  இருப்பதையும் அபகரித்துக் கொள்ளலாம் என்ற தற்துணிவும் பிறருக்கு வந்துவிடும். ஏனெனில் கடந்த வருடம் எமது வரலாறு சார்ந்து சில விடயங்களைச் சொல்லவென இருக்கும் அடையாளங்களில் ஒன்றான மந்திரிமனையைத் தனி ஒருவர்  தனக்குரிமையெனச் சொல்ல முற்பட்டதை எல்லோரும் அறிவர்.  –  என்றவாறு  கருத்துகளைப் பகிர்ந்து  கொண்ட  பல சமூகப் பொறுப்புள்ளவர்களையும் அங்கு  பார்க்கக் கூடியதாக இருந்தது.

அந்த அருங்காட்சியகத்தின்  முக்கியத்துவத்தையும், அதனூடாக எம்மைப் பற்றிய ஒரு பகுதியையாவது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப்போகிறோம் என்றதை அறிந்தவர்களாக எமது சமூகத்தைச் சார்ந்த பலர் அவ்விழாவுக்கு வருகை தந்திருந்தனர். அதில் சமூகப் போராளிகள் இருந்தனர். அரசியல்வாதிகள் பலர் காணப்பட்டனர். சமயத் தலைவர்கள், கல்விமான்கள், பல்கலைக் கழகப் போராசிரியார்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரது முகங்களை அங்கு கண்டோம்.

இது போன்ற முயற்சிக்கு எம்மத்தியில்  பல எதிர் கருத்துகள் உண்டாவது வழமை. ஆனால் சமூகப் பொறுப்பு, தற்காலத்தில் அதன் முக்கியத்துவம் , அது சார்ந்த அரசியல் பின்னணி என்பனவற்றைச் சரிவர விளங்கிக்கொண்டால் அவற்றை எல்லாம் புறந்தள்ளவிடலாம் என்றதை மக்கள் கருத்தாகவும் கண்டோம்.

திறப்பு விழாவன்று மக்கள் திரளாக வந்திருந்தனர். அருங்காட்சியகத்தைப் பார்க்கின்ற ஆர்வத்தில் நாமும் அங்கு சென்றிருந்தோம்.  கோட்டை வாயிலை ஞாகப்படுத்தும் முகப்போடு எம் சார்ந்த மன்னர்களின் வீர உணர்வு மிக்க உருவச் சிலைகள் எம்மை வரவேற்றன.  அருங் காட்சியகத்தைப் பார்க்க வருபவர்கள் உட் செல்லும்போது கோட்டை ஒன்றுக்குள் போகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு ஒரு புராதனச் சின்னங்கள் குவிந்து கிடக்கும் ஒரு மாளிகைக்குள் பிரவேசிப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட வேண்டும். அரச கோட்டைக்குள் செல்கிறோம் என்ற ஞாபகங்கள் எழுச்சி பெற வேண்டும் என்பது ஆறுதிருமுருகனின் விருப்பம். அந்த விருப்பத்துக்கமையவே அவர் முகப்பை அப்படி  வடிவமைத்திருப்பதாக  அறிந்தோம்.

பன்னிரண்டுபரப்பு விஸ்தீரணத்தில் காட்சியகம் அமையப்பெற்றிருந்தது.  நுழைவாயிலின் இருமருங்கிலும் இரண்டு சிலைகள்.ஒன்று எல்லாளனுடையது. மற்றையது சங்கிலிய  மன்னனுடையது.உள்ளே யாழ்ப்பாணப் பேரரசை  ஆண்ட 21 மன்னர்களுக்கும் சிலை அமைக்கப்பட்டிருப்பதோடு இதுவரை அங்கொன்றும், இங்கொன்றுமாய் தான்  சில மன்னர்களின் சிலைகளை வைத்திருக்கிறோம். ஆனால் இதுதான் முதன்முறையாக ஒரிடத்தில் அனைவருக்கும் சிலை எழுப்பி அவர்கள் பெயர்கள் , ஆட்சிக் காலங்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாக  அமைத்திருக்கிறார்கள். அத்துடன்  அன்று அச்சிலைகளைப் பல் துறை சார்ந்த பேராசிரியர்களும், கல்விமான்களும் திரை நீக்கம்  செய்து வைத்திருந்தனர்.

மூன்று தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட காட்சியகத்தின் முதலாவது தளத்தில்  யாழ்ப்பாண வரலாற்றோடு காணப்படும் பல பண்பாட்டு அரும் பொருட்கள் மற்றும் ஒளிப்படங்கள் என்பனவும், இரண்டாவது தளத்தில் சமயம், கல்வி, இலக்கியம் சார்ந்த பழமையான வரலாற்றில் இடம் பிடித்தவைகளும், மத நிறுவனங்களின் ஒளிப்படங்கள் போன்றவைகளும், 1800 கள் தொட்டு வெளிவந்த பத்திரிகைகளின் முதற்பிரதி போன்ற விடயங்களும், வெளியீடுகளும் மற்றும் அவை சார்ந்த பல பிற பொருட்களும், மூன்றாவது தளத்தில்  யாழ். பல்கலைக் கழகச் சித்திரமும், வடிவமைப்பும் என்ற துறைசார் மாணவர்களின் முயற்சிகளால் உருவாக்கப்பட்ட ,  அதாவது எமது கலாசாரத்தை மரபு சார்ந்து பிரதிபலிக்கின்ற ஓவியங்களையும் காட்சிப்படுத்த முனைந்திருந்தாலும். ஆரம்ப விழாவன்று அவற்றைப் பூரணமாகக்  காட்சிப்படுத்த அவகாசம் கிட்டவில்லை என்றும் ஆறுதிருமுருகன் தெரிவித்தார். அத்துடன் அன்றைய தினம் அது சார்ந்து அவர் மக்களிடம் வருத்தம் தெரிவித்து ஒரு அறிவித்தலையும் காட்சிப்படுத்தியிருந்தார்.

இந்த அருங்காட்சியகத்தின் இருமருங்கிலும் 1950 களுக்கு முன்னர் உபயோகித்த பல மோட்டார் கார்கள் , தட்டி வான், மாட்டு வண்டிகள்  போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எமது மண் சார்ந்த பல அரும்பொருட்களின் உறைவிடமாகப் போகின்ற இக் காட்சியகத்தை எம்மை அதிகாரத்துக்குட்படுத்துகின்ற வட மாகாண அரசே முன்னெடுத்திருக்க வேண்டும். அவர்கள் செய்யத் தவறிய பட்சம் தொல்பொருள் சார்ந்த அரச திணைக்களமும் அதனைச் செய்யாது விட்டுவிட்டனர். அவர்களால் அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் மக்களாகிய நாம் ஒன்று கூடி அதற்கான ஒரு அமைப்பை உருவாக்கி அதனூடகத் தன்னும் செயற்பட்டிருக்கலாம். இவை எதுவும் நடைபெறாத பட்சத்தில்  சிவபூமி அறக்கட்டளையினர் இந்த முயற்சியை முன்னெடுத்ததைப் பாராட்டாலாம். இந்தச் சமூகப் பொறுப்பைச் சிலர் சமயம் சார்ந்த வட்டகைக்குள் எல்லைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் குறை கூற  முனைந்ததையும் அவதானிக்க முடிந்தது. சமூகப் பொறுப்பாக முன்னெடுத்த இப்பாரிய முயற்சிக்கு முன்னால் அவைகள்  எல்லாம்  நிராகரிக்கப்பட வேண்டியவையே.

தொல்பொருள், மரபுரிமை சார்ந்த விடயங்களில் அவ்வளவு அக்கறை கொள்ளாத சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வைத் தந்திருப்பதோடு,  நல்லதொரு தேடலின் வெளிப்பாடாக வும், காலத்தின் தேவையை அறிந்த ஒரு செயற்பாடாகவும் இக் காட்சியகம் அமைந்திருக்கிறது. சமூகத்தைப் பல வழிகளில் ஒன்றிணைக்கப்போகும் ஒரு அரிய முயற்சி இது.  இதன் தேவையை அரசியல், பண்பாட்டு, மரபு சார்ந்த தளத்தில் இருந்து பார்த்தால் இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இதன் முக்கியத்துவம் பல வழிகளிலும் உணரப்படுவது மட்டுமல்ல அதனூடாகச் சொல்லப் படப்போகின்ற கதைகள் அருமைக்கும் பெருமைக்குமுரியதாக  இருக்கப் போவதென்றதில் எதுவித ஐயமுமில்லை.

இவ் அருங்காட்சியகமானது,  யாழ். நோக்கிவருகின்ற புதியவர்கள் யாழ். நகரத்துக்குள் பிரவேசிக்க முன்னர் யாழ். மண்ணையும், மக்களையும் பற்றிய வரலாற்றை அறிய உதவுகின்ற அதேவேளை யாழ்ப்பாண இராசதானியின் நுழைவாயிலாகக்  காணப்பட்ட நாவற்குழி பற்றியும் அவர்கள்  அறிய வாய்ப்புண்டு. வட மாகாணச் சுற்றுலாத்துறையினரும் இது பற்றிய விடயங்களைத்  தமது ஆவணங்களிலும், வழிகாட்டிகளிலும் உள்ளடக்கி எம்மை நோக்கி  வருபவர்களை இதனையும் பார்க்கின்றபடி செய்யவேண்டும். அது போன்று வட மாகாண கலாசார, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சும் தமது முயற்சியினூடாக இதனையும் ஒரு முக்கிய ஆவணமாகப் பதிவிட வேண்டும்.

துயர் பகிர்வு

சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada