தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு - இலவச சவாரி வழங்கும் ஊபர் நிறுவனம்..!!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 6) நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக வாக்கு சாவடிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வருகை தரும் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊபர் நிறுவனம் இலவச சவாரி வழங்க உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்படுள்ள செய்தி குறிப்பில், ஊபர் நிறுவனமானது இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.
அதன்படி சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு அன்று இலவச சவாரி அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வீட்டிலிருந்து வாக்குச்சாவடி சென்று திரும்பும் வகையில் இலவச சவாரியானது குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்கு உட்பட்டும் பயண கட்டண அளவில் ரூ.200 வரை 100 சதவீதம் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும்.
சவாரி செய்வோர் கைபேசியின் மூலம் ஊபர் செயலி வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விருப்பத்தின் பேரில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.