சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம் - மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவிப்பு..!!
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் நாளுக்கு நாள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக வடமாநிலங்களில் மகா பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், பிப்ரவரி 2-ம் தேதி உலக பிரபல பாப் பாடகியான ரிஹானா, கலவரத்தில் போராட்டக்குழுவினர் தாக்கப்படும் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``நாம் ஏன் இதைப் பற்றிப் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். ரிஹானாவின் அந்த ட்வீட்டால் இந்திய விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், லெபனானைச் சேர்ந்த மியா கலிஃபா, அமெரிக்க துணை அதிபரின் உறவினரான மீனா ஹாரிஸ் ஆகிய பெண் பிரபலங்கள், விவசாயிகள் போராட்டத்துக்காக ட்விட்டரில் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகளான மீனா ஹாரிஸ், உலகின் மிகப் பழைமையான ஜனநாயகம் (அமெரிக்கா) ஒரு மாதத்துக்கு முன் பாதிக்கப்பட்டது போலவே மிகவும் பிரபலமான ஜனநாயக நாடும் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் இன்டர்நெட் முடக்கம் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின்போது துணை ராணுவப்படையைக் கொண்டு நடத்தப்பட்ட வன்முறைக்கு அனைவரும் கோபம் கொள்ள வேண்டும்” என்று தனது முதல் டுவீட்டில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் கமலா ஹாரிஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அவரது உறவினர் மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீனா ஹாரிஸ் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.