இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் - குமாரபுரத்தில் கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளின் 25ஆவது நினைவு தினம்..!!
1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 25 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 22 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்தனர்.
எனினும், அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை. இன்று நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் சந்திரிக்கா குமாரதுங்க நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்த காலத்திலேயே மேற்படி குமாரபுரம் படுகொலை இடம்பெற்றிருந்தது.
இதனை நினைவுகூரும் வகையில், அப்பகுதி மக்கள் அங்குள்ள கோயிலொன்றில் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூசை வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.
நன்றி : Maatram (Feb 11, 2019 )
இதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத்தூபி அமையப்பெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் ஒன்றுகூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு ஊடகவியளார்கள் செல்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது