டிரம்ப்பின் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை..!!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை 12 மணி நேரம் முடக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்று வந்தது.
அப்போது, அந்த கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால், பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த முற்றுகை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய டிரம்ப், தான் பேசிய வீடியோக்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார். இதனால், அவை சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்த வீடியோக்களை ட்விட்டர் நிறுவனம் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கியது.
மேலும், விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் @realDonaldTrump பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. அதன்படி 12 மணி நேரம் ட்விட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், டிரம்ப் தொடர்ந்து வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.