சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நவ.12ல் அமேசான் ப்ரைமில் வெளியீடு..!!
தீபாவளி இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 12- ஆம் தேதி சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் (அமேசான் ப்ரைமில்) வெளியாகும் என்று நடிகர் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.அமேசான் ப்ரைமில் திரைப்படம் வெளியாகும் நிலையில் சூரரைப் போற்றின் ட்ரெய்லர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
'என்.ஜி.கே', 'காப்பான்' படங்களைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'சூரரைப் போற்று'. நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கி வருகிறது படக்குழு. தனது 2டி நிறுவனம் மூலம் 'சூரரைப் போற்று' படத்தை தயாரித்து வருகிறார் சூர்யா.
இந்தப் படம் குறித்து சூர்யா, “வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் செய்த விஷயங்கள் எங்களை ஈர்த்தது. அதை பெரிய திரைக்கு ஏற்றவாரு சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். 'ஆயுத எழுத்து' படத்தில் நான் நடித்த காலத்திலிருந்தே இயக்குநர் சுதாவுக்கும் எனக்கும் நட்புண்டு. அவர் எனக்கு ராக்கி கட்டும் சகோதரி. அவரது திறமை மிது அதிக மரியாதை உண்டு. இந்தப் படம் ஆரம்பிக்க அவர் 3 வருடங்கள் காத்திருந்தார் என்று தெரிவித்தார்.
இந்திய விமானப்படையில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற தாமதமானதால் அக்டோபர் 30- ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 12- ஆம் தேதி சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.